Friday, July 26, 2013

தமிழ் சினிமா என்றும் மரியான்!


மரியான் என்றால் சாவு இல்லாதவன். தமிழ் சினிமா மரியான் என்பதற்கு சான்றே இந்த மரியான் திரைப்படம். கதை என்று பார்த்தால் ரொம்பவும் நேரடியான எளிமமையான கதை. மீனவ சமுதாயத்தை சார்ந்த கதாநாயகன் மரியான், பழமையான முறையான ஆழ் கடலில் குதித்து சுறா மீன்களை குத்தி பிடித்துவரும் திறமை கொண்டவர். ஒரு முரட்டு இளைஞனாயினும், தன் வயதுக்கு மிகுந்த தெளிவும் திறமையும் கொண்டவராக அறிமுகப்படுத்தபடுகிறார். மரியான் மீது காதல் கொள்ளும் கதாநாயகி பனிமலர், மரியான் தன் மீது வைத்துள்ள காதலை வெளிக்கொணர பல முயற்சிகளை எடுக்கின்றாள்.

பனிமலர் மீது கொண்டிருக்கும் காதலை ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ளும் மரியான், பனிமலரின்  தந்தை வாங்கிய கடனை சமாளிக்க வெளி நாடு செல்ல முனைகிறார். கடலையும், பனிமலரையும் முழுவதுமாக சுவாசித்த மரியானுக்கு இரண்டு வருடம் சுடான் நாட்டில் கட்டிட தொழிலாளர் வேலை. திரும்பி வர சில நாட்களே இருக்கும் வேலையில், சுடான் நாட்டு புரட்சியாளர்களிடம் பினைக்கைதியாக சிக்கிக் கொள்கின்றார். அவர்களிடம் இருந்து மீண்டு, மீண்டும் தனது காதலிகளாகிய கடல் மற்றும் பனிமலரை எவ்வாறு கரம் பிடிக்கின்றார் என்பதே மீதி கதை.

தனுஷ் தனக்கே உரிய யதார்த்தமான நடிப்பில் தன்னுடைய ஆடுகளம் நடிப்பின் அடுத்த பரிமாணத்தை நமக்கு அளித்துள்ளார். ஓர் அழகான மீனவ வீட்டு பெண்ணாக; மரியான் மீது காதல் கொண்டவளாக; காதலனை தொலைத்து நிற்கும் அபலை பெண்ணாக; தனக்கு வரும் இன்னல்களை காதல் எனும் மன வழிமையுடன் தீக்கிரையாப்பவலாக; மேலும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் தேவதையாக கதை முழுவதும் வலம் வந்துள்ளார் பனிமலறான் பார்வதி மேனன்.

இவர்களை தவிர கதையில் அவ்வப்போது வரும் அணைத்து பாத்திரங்களும் திரைக்கதையை மெருகேற்றி உள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் தீக்குரிசி கதாபத்திரத்தில் வரும் விநாயகம், திமிரு படத்திற்கு பிறகு தன் திறமையை தமிழுக்கு மீண்டும் ஒருமுறை உனர்த்தியுள்ளார். நண்பர்களாக வரும் அப்புக்குட்டி மற்றும் ஜெகன், கதைக்கு முக்கியமான காட்சிளில் தங்கள் பங்கினை சிறப்பாக செய்து மடிகின்றனர்.
தமிழ் திரை உலகு கண்டிராத கதைகலத்தையும் காட்சிகளையும் தர இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெரும் பாடு பட்டிருக்க வேண்டும். தனிமையிலே, உணவின்றி, மரணம் தனக்கு மிக அருமையில் இருக்கும் நிலையில் ஒரு மனிதனின் மன  நிலையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பரத் பாலா.

கதை ஜவ்வாக இழுக்கபட்டிருக்கின்றது என்று ஒரு குற்றச்சாட்டு பரவலாக பார்ப்பவர் மனதில் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் அது பல மசாலா படங்கள் பார்த்து அவை நமக்கு செய்த எதிர்பார்ப்பு கோளாறு தான். கமலஹாசன் படம் பாணியில், கதையில் சில இடங்களில் நிகழ்வுகளுக்கு காரணம் குறிப்பிடப்படவில்லை. பார்ப்பவரின் கற்பனை சக்திக்கு அது ஒரு சவாலாகவே இருக்கின்றது. தமிழ் ரசிகர்கள் அடுத்த கட்ட திரைப்படங்களை பார்க்க துணிவார்கள் என்று இந்த இயக்குனரும் கொண்டிருக்கும் நம்பிக்கை பாராட்டப்பட வேண்டியது.

கடைசியாக, இந்த பதிவின் மூலம் மரியான் இயக்குனர் மற்றும் அணைத்து இயக்குனர்களுக்கும் ஒரு வேண்டுகோள். கிராமத்து இளைஞன் என்றாலே குடித்துவிட்டு கூத்தடிப்பவனாகவும், நகரத்து இளைஞன் என்றால் டாஸ்மாக் கடைகளில் தவம் கிடப்பவனாகவும் காட்டுவதை நிறுத்தவும். இது உண்மை நிலவரம் என்றாலும், மறைமுகமாக குடியை ஊக்குவிக்கும்.
   

ஆஸ்கார் பிளம்ஸ் இதைபோன்ற மேலும் பல படங்களை தயாரிக்க வேண்டும் என்று கேட்பதோடு இப்பதிவை நிறைவு செய்கின்றேன்.

No comments: