ஒரு ஊரில் ஐந்து நண்பர்கள் இருந்தனர். இவர்கள்
ஐவரும் டிரவுசர் போட்ட காலத்தில் திக் பிரெண்ட்ஸ்.
முதல்
நண்பன் பரம்பரை பணக்காரன். வெளி
நாடு சென்று பெரும் படிப்பு படித்தான். பல நாடுகளுடன் வியாபாரம் செய்யும் திறமை
பெற்றான். அவனுடைய தந்தையின் இந்திய
வியாபாரத்திற்க்காக பல தேசங்களில் இருந்து முதலீட்டை வரவழைத்தான். அவனுடைய வாழ்வு முறை 'எவனை கெடுத்தாலும்
பரவாயில்லை தான் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம்' என்று சர்வதேச அளவில் வளர்ந்த்து.
இரண்டாவது
நண்பனும் பரம்பரை பணக்காரன். அவன்
சிறு வயதிலே கல்வியை விட்டுவிட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். அவன் வாழ்ந்து வந்த நகரத்திலே மிக பெரிய ரியல்
எஸ்டேட் வியாபாரியாக வளர்ந்தான்.
அரசு அதிகாரிகளை கவனித்து, அவர்கள்
மூளமாக அரசு ரோடு காண்ட்ராக்ட், கல் குவாரி, மணல் குவாரி போன்ற கொள்ளை
வியாபாரங்களில் செழித்து உள்ளூரிலே பெரிய பணக்காரனாக வளர்ந்தான்.
மூன்றாவது
நண்பன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். கஷ்டப்பட்டு படித்து டாக்டர் ஆனான். அந்த ஊரிலே கிளினிக் அமைத்து படிப்படியாக வளர்ந்து, வங்கியில் லோன்
வாங்கி, சொந்த வீடு, சொந்த கிளினிக்
என்று நிதானமான ஆனால் குறைவில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
நான்காவது
நண்பன் உயர் கல்வி படிக்கும் அளவிற்கு வசதி பெறவில்லை. பள்ளி முடிந்தவுடனே வேலைக்கு போய் சம்பாதிக்கும் நிர்பந்தம். அங்கும் இங்கும் என்று பல வேலைகள்
பார்த்துவிட்டு பிறகு நீரந்தரமான வேலை ஒன்றை தேடிக்கொண்டான். ஊரில் இருக்கும் பஞ்சு ஆலையில் மெக்கானிக்காக
சொற்ப சம்பளத்தில் எளிமையான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டான்.
ஐந்தாவது
நண்பன், பிறப்பாலே ஏழை. பள்ளிக்கு சென்றதே மதிய உணவு திட்டத்தில்
கொஞ்சம் சோறு கிடைக்கும் என்பதனால் தான். ஆறாவது படிக்கும் பொழுதே காயலாங்கடை ஒன்றில் வேலைக்கு பொய் சேர்ந்தவன், இன்று வரை குப்பைகளுக்கு நடுவில் தன்
வாழ்க்கையை தேடிக்கொண்டு இருக்கின்றான். வீடு வீடாக சென்று பழைய பேப்பர் மற்றும் பொருட்களை வாங்கி பணம் ஆக்குவதே
அவன் தொழில். குடும்பத்துடன் மூன்று
வேலை கஞ்சி குடிக்க முடிந்தது,
யாருக்கும் நோய் என்ற செலவு இல்லாத நாட்களில் மட்டும்.
இவர்கள்
பிரிந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் நண்பன், இரண்டாவது
நண்பனுடன் இன்றளவும் நட்பு வைத்திருந்தான். சர்வதேச வியாபாரிக்கு தேவையான உள்ளூர்
விவகாரங்கள் எல்லாம் செய்து முடிப்பது உள்ளூர் ரியல் எஸ்டேட் நண்பன். இரண்டாவது நண்பனுக்கு இருக்கும் அரசியல்
மற்றும் அரசு அதிகாரிகளின் நட்பு,
முதல் நண்பனுக்கு பேருதவியாக இருந்தது. அரசு அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்தனர். முதல் நண்பனின்
ஆசியில் இரண்டாம் நண்பன் செழித்தான். இரண்டாம் நண்பனின் ஆசியில் அரசு அதிகாரிகள் செழித்தனர். அரசியல்
கட்சிகளும் கூட செழித்தன.
நான்காவது
நண்பன், ஐந்தாவது நண்பனுடன்
இன்றளவும் நட்பு வைத்திருந்தான். இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து தத்தம்
வாழ்க்கை மற்றும் வறுமையை நினைத்து நொந்து கொள்பவர்கள். அரசு என்றாவது ஏதாவது இலவசம் கொடுத்தால் முதலாவதாக வரிசையில் நின்று
வாங்கிக்கொள்பவர்கள். மற்ற வகையில்
வறுமை கோட்டுக்கு மேலும் கீழுமாக நித்தம் தத்தளித்துக்கொண்டிருப்பவர்கள்.
மூன்றாவது
நண்பனுக்கு பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. அவனுக்கு அவனுடைய மருத்துவ வட்டாரத்தை தவிர்த்து நண்பர்கள் தேவைப்
படவில்லை. தொழிலில் கவனம்
செலுத்தினான். வரும் பணத்தில்
ஒழுங்காக வரியும் கட்டினான்.
இவனுக்கு அரசை பற்றியும் சிந்தனை இல்லை, சுற்றி இருக்கும் மக்களை பற்றியும் கவலை
இல்லை. இவனுடைய கவலை எல்லாம்
சம்பாத்தியத்தை எப்படி பெருக்கிக்கொள்வது, குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது என்று தன்னை சுற்றி மட்டுமே இருக்க
முடிந்தது.
இந்த
நிலையில், அவர்கள் ஊரில் பாராளுமன்ற
தேர்தல் நடைபெற்றது. நம் ரியல்
எஸ்டேட் நண்பனுக்கு பதவி மீது ஆசை,
முக்கியமான கட்சி ஒன்று ஒரு சீட்டுக்கு முப்பது கோடி என்று விலை நிர்ணயம் செய்தது. இரண்டாம் நண்பன் முதல் நண்பனுடன் கலந்து
ஆலோசித்தான். முதல் நண்பன் முழு
பணத்தையும் கொடுப்பதாகவும், இதற்க்கு கைமாறாக தனது பதவியை முதலானவனின் நலனுக்காகவே
பயன்படுத்துவதாகவும் உடன்பாடு ஏற்பட்டது.
தேர்தல்
களம் சூடு பிடித்துக்கொண்டு இருந்த்து. இதுவரை தன் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள்
என்று கூட கவலை படாத இரண்டாமானவன்,
உள்ளூரில் இருக்கும் மூன்று நண்பர்களையும் அழைத்து விருந்து வைத்தான். தனது வெற்றிக்கு தோள் கொடுக்குமாறு
கேட்டுக்கொண்டான். தனது கட்சி
சின்னமான "முதலை வாய்"
சின்னத்துக்கே வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டான். வருங்கால MP நமது நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் இவர்கள் மூவருக்கும்
மிகுந்த பெருமை.
மருத்துவன், அவனது நண்பர்கள், நோயாளிகள் அனைவரிடமும் "முதலை வாய்" சின்னத்துக்கே
வாக்களிக்குமாறு பணிந்தான்.
மெக்கானிக்கோ, அவனுடைய பஞ்சாலை தோழர்களை அழைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று
"முதலை வாய்" சின்னத்துக்கு வாக்கு சேகரித்தான். காயலாங்கடைக்காரன், போஸ்டர் ஓட்டுவது, கொடி கம்பு நடுவது,
ஒலிபெருக்கி கட்டுவது போன்றவற்றில் பின்னி பிணைந்து பிசியாகிவிட்டான்.
தேர்தல்
முடிவுகள் வந்தது. 'முதலை வாய்'
தமிழகம் எங்கும் அனைவரும் வாய் பொலக்கும் அளவிற்கு பெரும் வெற்றி பெற்றது. ஐந்து நண்பர்களும் கொண்டாடினர். இருவர் அவர்கள் மாளிகைக்குள். இருவர் ரோட்டில். இன்னொருவன் அவனது வீட்டில்.
ஒரே
மாதத்தில், ரியல் எஸ்டேட்
வியாபாரியின் வியாபாரம் தமிழகம் முழுவதும் பரவியது. ஒரே வருடத்தில், முதல்
நண்பனின் நட்பு பிரதமருடன் உணவு அருந்தும் அளவிற்கு வளர்ந்தது, அவனுக்கு சாதகமாக
நாடாளுமன்றமே நகர்ந்தது .
ஐந்து
ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசாங்கத்தின்
கொள்கையினால் வீட்டுக்கடன் மற்றும் வங்கிக்கடன் வட்டி விகிதம் எரிப்போயிருந்த்து.
மருத்துவர் இன்னமும் கடன் அடைத்துக்கொண்டு இருந்தார். MP செய்த மணல் கொள்ளையினால், ஆறு சின்னாபின்னமாகி,
பஞ்சு ஆலைக்கு தேவையான தண்ணீர் வற்றி, பஞ்சாலை மூடப்பட்டது. மெக்கானிக் உள்ளூரில் வாழ வழியில்லாமல், அரபு
நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருந்தான். வீட்டு வாடகை முதல் வெங்காயம் வரை எல்லாம் விலை ஏறிப்போய் இருந்தது. விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாத
காயலாங்கடைக்காரன், தனது மூத்த மகனின் படிப்பை நிறுத்தி குப்பை அல்ல அனுப்பினான்.
சத்தற்ற
வெள்ளை சோற்றையும், மரபீன மாற்றம் செய்யப்பட்ட காய் கறிகளையும் சாப்பிட்டு
அனைவருமே நோய்க்கு அடிமைகளாக இருந்தனர். எதோ மருத்துவன் நண்பன் என்பதால் பிழைத்தனர். அப்படி ஒரு சந்தர்பத்தில் மருத்துவர் வீட்டில் எளிய நண்பர்கள் மூவரும்
சந்தித்தனர், மெக்கானிக் சொன்னான்
"நாட்டிலே 90 விழுக்காடுக்கும் மேல இருப்பது
நம்பளை போன்றவர்கள். நாம
ஏண்டா கிறுக்கன் மாதிரி அவனுக்கு ஓட்டு போட்டோம்? அவனுக அவங்க வளர்ச்சிய
பாப்பானுகளா இல்ல நம்பள கவனிப்பாங்களா?. அடுத்த தேர்தலில் நாம நிக்கனும்டா. ஏழைகள், நடுத்தர வர்க்கம்,
வல்லுனர்கள் இவர்கள் எல்லாம் நாட்டிற்க்கான திட்டத்தை தீட்டணும். பெரும்
பணக்காரர்களையும், நாட்டின் வளத்தை சுரண்டும் சுயநல கொல்லைக்காரர்களையும் தொடப்பம்
வைத்து அடித்து துரத்த வேண்டும்" என்று சொல்லி முடித்தான். இல்லை ஆரம்பித்தான்...
தமிழக மக்களே, இம்முறை கட்டாயம் வாக்களியுங்கள். சிந்தித்து சரியான பிரதிநிதியை தேர்ந்தெடுங்கள்.
No comments:
Post a Comment